×

திருவண்ணாமலை மார்க்கெட், தேரடி வீதியில் நடந்து சென்று முதல்வர் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்தியா கூட்டணியின் நேற்று முன்தினம் இரவு வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் வேலூர் திமுக கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர், நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சி முடிந்ததும் காலை 8 மணியளவில் திருவண்ணாமலை மாடவீதிக்கு புறப்பட்டு சென்றார். திடீரென தேரடி வீதி கடலைக்கடை சந்திப்பு பகுதியில் உள்ள காய்கறி மார்கெட்டுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்க்கெட்டுக்கு வந்ததை பார்த்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்து கைக்குலுக்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்கள், மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் வழங்கும் முதல்வருக்கு தான் எங்கள் ஓட்டு என உற்சாகமாக தெரிவித்தனர். அப்போது, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், பூக்களை அவரிடம் வழங்கினார். இதையடுத்து, அங்கிருந்து தேரடி வீதியில் நடந்து சென்ற முதல்வர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அவ்வழியாக பள்ளிக்கு சென்ற மாணவிகள் மற்றும் பெண்கள், சிறுவர்கள், முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது, பள்ளி மாணவிகளிடம், முதல்வர் நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். முதல்வர் தேரடி வீதியில் வாக்கு சேகரிப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

பின்னர், திடீரென தேரடி வீதியில் இருந்து அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபம் வரை நடந்து சென்று, அங்கிருந்த பக்தர்களிடம் வாக்கு சேகரித்தார். இதையடுத்து, அங்குள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து முதல்வர் டீ குடித்தார். டீ சுவையாக இருந்தது என டீக்கடைக்காரருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். நெகிழ்ச்சி அடைந்த டீக்கடைக்காரர், கைகூப்பி முதல்வருக்கு நன்றி கூறினார். தொடர்ந்து, காந்தி சிலை வரை நடந்து சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் முதல்வர் ஈடுபட்டார். ஒரு மணி நேரம் முதல்வர் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். முதல்வருடன் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் உடன் சென்றனர்.

The post திருவண்ணாமலை மார்க்கெட், தேரடி வீதியில் நடந்து சென்று முதல்வர் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thiruvannamalai Market ,Theradi Road ,Lok Sabha election ,Tamil Nadu ,M.K.Stalin ,India alliance ,Vellore ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...